Thursday 1 December 2016

மொறுமொறு சிப்ஸ் வேண்டாம்....ப்ளீஸ்...


சிப்ஸ் இல்லாமல் சாப்பிடவா....?
சான்சே இல்லை.....
என்னால முடியவே முடியாது,சிப்ஸ் தானே எனக்கு சாப்பாடு என சொல்லும் நபர்கள் தான் அதிகம்.

அந்தளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சிப்ஸிற்கு அடிமையாக இருக்கிறார்கள்.

மொறுமொறு சிப்ஸ் உங்கள் வயிறுக்கு மட்டுமல்ல; உங்கள் உயிருக்கும் வேட்டு வைத்துவிடும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா.....?

இந்த பதிவு உங்களை பயமுறுத்துவதற்கு அல்ல; மாறாக இந்த சிப்ஸ் உருவாக்கும் விபரீதத்தை பற்றி சொல்லவே......

சரி அப்படி என்ன மனித உடலுக்கு தீங்கு செய்கிறது நீங்கள் கேட்கலாம்.... அதற்கு விடை சொல்லவே இந்த பதிவு.

சரி விசயத்திற்கு வருகிறேன்.....

சிப்ஸ் பெரும்பாலும் பல்வேறு கிழங்கு மற்றும் காய்கறி வகைகளில் இருந்து தயாராகிறது.

இதில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தான் நம் மக்களிடையே மிகவும் பிரபலம் காரணம் அதன் சுவை மற்றும் மிருதுவான மொறுமொறு தன்மை.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது....

ஆமாங்க..

மொறுமொறுப்பாக இருப்பதற்கு எண்ணெய் பயன்படுத்துகிறோம். அதனால் வருகிற விளைவுகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அதிகப்படியான வெப்பநிலையில் பொறிப்பது.

இங்கு தான் வினையே ஆரம்பிக்கிறது. செய்வினை என்று நினைக்காதீங்க... இது வேதிவினை.

கொஞ்சம் இன்னும் விவரமாக சொல்கிறேன்....

உருளைக்கிழங்கில் சர்க்கரை சத்து மற்றும் அமினோ அமிலம் குறிப்பாக அஸ்பராகின் மிகுதியாக இருக்கும்.


இந்த அஸ்பராகின் அமினோ அமிலம
சர்க்கரை மூலக்கூறுகள் முன்னிலையில்,அதிகளவு அதாவது
120°C செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் உட்படுத்தப்படும் பொழுது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
அக்ரிலமைட் (acrylamide) எனும் வேதிப்பொருளாக ஆக மாற்றுகிறது.

இந்த வேதிப்பொருள் மனிதர்களுக்கு கேன்சர் நோயை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.(மேலும் பொறித்த உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உடல் எடை கூடுதல்,உடல் மந்தம்,நரம்பு தொடர்பான பிரச்சனைகள் என பல தொந்தரவுகளுக்கு உத்தரவாதம் உண்டு என்பதையும் மனதில் கொள்ளுங்கள்)

பொதுவாக இந்த அக்ரிலமைட் வேதிப்பொருள் காகிதம்,பிளாஸ்டிக் உற்பத்தியில் கோபாலிமெராக பயன்படுத்தப்படுவது உண்டு.

இங்கு அடிப்படை பிரச்சனையே அதிகளவு வெப்பத்தால், உருளைக்கிழங்கு சிப்ஸாக பொறிக்கப்படும் பொழுதே இத்தகைய அசம்பாவித நிகழ்வு உருவாகிறது.

மாறாக குறைந்த வெப்பநிலையில்,
அதாவது  100°C வெப்பநிலைக்கு கீழ்
தண்ணீரில் வேகவைத்து, குறைந்த எண்ணெயில் உருளைக்கிழங்கை உணவாக தயார் செய்யும் பொழுது,இது போன்ற உடலுக்கு தீங்கு செய்யும் கெமிக்கலாக மாற்றம் பெறுவதில்லை.

என்ன மக்களே...
ஆச்சர்யமாக இருக்கா.....?

அதிக சூடு நம் உடம்புக்கு மட்டுமல்ல; உருளைக்கிழங்கிற்கும் ஆகாது, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறித்த எண்ணெயினை மீண்டும் மீண்டும் சிப்ஸ் பொறிக்க பயன்படுத்துவதால் வருகிற பிரச்சனைகள் இன்னும் தாராளம், என்பதையும் மறக்காதீங்க.....

விட முடியலையே.......................என நினைப்பவர்களுக்கு.....
உங்கள்
நாக்கு சொல்வதை கேட்காமல்;
உங்கள்
உடம்பு சொல்வதை கேளுங்கள்,
அது ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்ய தவறுவதே இல்லை.

எந்த உணவையும் முடிந்தளவிற்கு
எண்ணெயில் பொறிப்பதை தவிர்த்து விடுங்கள்.அதுவே உங்கள் உடலுக்கு நலம் பயக்கும்.

No comments:

Post a Comment