Sunday 4 December 2016

பார்வைகள் பலவிதம்-வெ.பொன்ராஜ் அவர்களின் கருப்பு பண ஒழிப்பு பற்றிய சாட்டையடி பதிவு....


மதிப்பிற்குரிய முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் மேதகு
அப்துல் கலாம் ஐயாவின் அறிவியல் ஆலோசகராக இருந்த திரு வெ. பொன்ராஜ் அவர்களின் கருப்பு பண ஒழிப்பு பற்றிய சாட்டையடி பதிவு, நக்கீரன் வார இதழில் கருப்பு பணத்தை ஒழிக்குமா டிஜிட்டல் கரன்ஸி...? என்கிற தலைப்பில் வெளிவந்தது.

திரு பொன்ராஜ் அவர்களது கருப்பு பண ஒழிப்பு பற்றிய பார்வை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.அதனை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு தருகிறேன்.

சரி வாங்க...... படிக்கலாம்.......

நான் எடுத்த நடவடிக்கை உங்களது நல்வாழ்விற்குத்தான் என்பதை உணர்ந்து 50 நாளைக்கு கஷ்டப்படுங்கள், அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி மலர்கிறது என்று' -பிரதமர் வேண்டுகோள் விடுக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையினால் ஏற்படும் சிரமங்கள், ஊழலை ஒழிக்க பயன்படுமேயானால், நாம் அனைவரும் அதற்காக தாங்கிக்கொண்டு தான் ஆக வேண்டும்.

கிராமப்புற மக்களை, ஏழை-எளிய நடுத்தர மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய பிரதமரின் இந்தக் கறுப்புப் பண ஒழிப்பு அறிவிப்பு, கறுப்புப் பணத்தை தடுக்கப்போவதில்லை. மாறாக கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கும், கொள்ளையர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெற்றதுதான் மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.

வளர்ந்த நாடுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதம் என்ற அளவிலேயே கரன்சியின் மதிப்பு இருக்கும். ஆனால் இந்தியாவில் இது 12 சதவிகிதமாக உள்ளது. அப்படியென்றால் இந்தியாவில், பெரும்பாலான வர்த்தகம் ரொக்கத்தின் மூலம் நடப்பதையும் வங்கியின் நடைமுறைகளுக்கு அப்பால் பணப்பரிவர்த்தனைகள் நடப்பதையும் இது காட்டுகிறது. ஏனென்றால் இந்தியா 70 சதவிகிதம் கிராமப்புற பொருளாதாரத்தைச் சார்ந்தது.

"டிஜிட்டல் கரன்சியை நோக்கி இந்தியாவை வழிநடத்துகிறோம், அனைவரும் டிஜிட்டல் கரன்சிக்கு மாறுங்கள்' என்று ஒரு நாட்டின் நிதியமைச்சர் சொல்கிறார். கடந்த 30 நாட்களுக்கு முன்பாக, "அனைத்து ஏ.டி.எம். பின்நம்பர்களையும் திருடிவிட்டார்கள், உடனடியாக பின்நம்பரை மாற்றுங்கள்' என்று தகவல் வந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். பின் நம்பர்களை திருடாத நெட்வொர்க் கட்டமைப்பே உருவாக்காத நிலையில், இந்திய வங்கிகளின் பிரைமரி சர்வர்களை வெளிநாட்டில் வைத்துக்கொண்டு, வங்கிகளை நடத்திக்கொண்டு எந்த நம்பிக்     கையில், இந்தியர்கள் அனைவரையும் "டிஜிட்டல் கரன்சியை மட்டும் உபயோகிக்க வேண்டும்' எனச் சொல்கிறார் நிதியமைச்சர்? இந்தியாவின் பொருளாதாரத்தையே அன்னிய சக்திகள், இணையத்தின் மூலம் ஊடுருவி, மக்களின் பணத்தை ஒட்டுமொத்தமாக திருடிச்செல்லும் சூழ்நிலை உருவாகாதா?

"ஏழை மாணவர்களுக்கு கொடுத்த கல்விக்கடனுக்கு வட்டியில்லை. அதை 15 ஆண்டுகளில், அவர்களது வருமானத்திற்கு ஏற்ப வசூலிக்கலாம்' என்ற அரசின் உத்திரவை மதிக்காமல், வங்கியை ஏமாற்றிய நிறுவனங்களை வைத்தே மாணவர்களிடம் வசூலித்து... அதனால் உயிரிழந்த மாணவர்களுக்கு பதில் சொல்லாத, வங்கிகள் மேல் நடவடிக்கை எடுக்க இயலாத மத்திய அரசு தான், இன்றைக்கு சாதாரண மக்களின் பணத்தை வங்கியில் செலுத்தச் சொல்கிறது.

மல்லையாவின் கடனை "வராக்கடன், இனிமேல் வசூலிக்க முடியாத கடன்' என்று சொல்லும் வங்கித் துறையை சீர்திருத்தாமல், அவர்களது பிரச்சினையை சமாளிக்க, மக்களின் பணத்தை வங்கி மூலமாக கொள்ளையடிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

"2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன்' என்று சொன்ன பிரதமர் மோடி, 14 லட்சம் பேருக்குத்தான்... அதுவும் திறன் குறைந்த வேலை வாய்ப்பை கடந்த 2 ஆண்டுகளில் உருவாக்கியிருக்கிறார். "மேக் இன் இந்தியா'  திட்டத்தின் மூலம் வந்த முதலீட்டில் 36 சதவிகிதம், மொரீஷியஸில் இருந்து இந்தியாவில் உருவான கறுப்புப் பணம் அன்னிய முதலீடாக வந்திருக்கிறது. இதில் எந்தவிதமான மாற்றமோ தடையோ செய்யாமல், கறுப்புப் பணத்தை எப்படி ஒழிக்க முடியும்?

பிரதமர், தேர்தலின்போது மேடையில் சொன்ன இந்தியாவின் வளர்ச்சிகான மாபெரும் திட்டங்கள் எதுவுமே செயல்பாட்டிற்கு வரவில்லை. கறுப்புப் பணத்தை பதுக்கிய, லஞ்ச ஊழலில் திளைத்த அரசியல்வாதிகள் பி.ஜே.பி.யின்  ஜனார்தனரெட்டியைப் போல் ரூ.500 கோடியில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் வங்கியின் வரிசையில் நின்று 4000க்கும் 2000க்கும் அல்லல்பட்டு, கறுப்பு மையால், கறுப்புப் பணத்தை மாற்ற வந்த குற்றவாளி என்று பெயரை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிறிய கணக்கு, இந்தியாவின் மொத்த பணத்தில் ரூ.14 லட்சம் கோடி ரூ.500, ரூ.1000 பணம் மூலம் உருவாக்கப்பட்டது. இதை ஒழித்துவிட்டு ரூ.2000, ரூ.500 மீண்டும் திரும்ப கொண்டு வந்ததன் மூலம் இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை இல்லை என்பதை உணர்த்திவிட்டது.

"இதன் மூலம் ரூ.5 லட்சம் கோடி கறுப்புப் பணம் வரும், இல்லை அது கணக்கில் வராமல் போனால், புதுப் பணம் ரூ.5 லட்சம் கோடியை மீண்டும் ரிசர்வ் பேங்கின் மூலம் புகுத்தி... அதன் மூலம் இதுவரை 7 லட்சம் கோடியை ஏமாற்றிய பெரும் நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் கொடுத்து இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்தலாம்' என்று திட்டமிடப்பட்ட விதம் தோல்வியில்தான் முடியும்.

ஏனென்றால் இந்தியாவில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் இதுவரை கைப்பற்றப் பட்ட கறுப்புப் பணம் ரூ.2.79 லட்சம் கோடியாகும். ஆனால் வெளிநாடுகளுக்குப் போகும் கறுப்புப் பணத்தை தடுக்கும் நடவடிக்கை இதுவரை எடுக்கப் படாததால், மீண்டும் கறுப்புப் பணம் மிக சுலபமாக, ரூ.2000 நோட்டுகள் மூலமாக உருவாகும்.

இதுவரை மக்கள் வங்கியில் போட்ட பணம் ரூ.6 லட்சம் கோடி, டிசம்பர் 31க்குள் மக்களிடம் உள்ள ரூ.10 லட்சம் கோடி வெள்ளைப்பணம் வரும். அப்படி யென்றால், இதுவரை வந்த கறுப்புப் பணமும், மக்கள் பணமும் சேர்த்து ரூ.12.79 லட்சம் கோடி. ஒருவேளை வராமல் போன கறுப்புப் பணம் மிச்சம் ரூ.1.2 லட்சம் கோடிதான். எனவே, மிகப்பெரிய சிக்கலை பொதுமக்களுக்கு உருவாக்கிய இந்த கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எதிர்பார்த்த முடிவை தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்தச் சிக்கலை சமாளிப்பதற்கு, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.

வருமான வரியை முற்றிலுமாக ஒழித்து விட்டு, செலவு வரியை கொண்டு வந்தால், கறுப்புப் பணம் ஒழியும். இந்தியா வளர்ந்த நாடாக மாறவில்லை என்பதால், அதுவரை வருமான வரியை 5 முதல் 20 சதவிகிதமாக குறைத்துவிட்டு, செலவு வரியை கொண்டுவந்தால், மொபைல் போன் மூலமாக வங்கி பரிவர்த்தனை, வர்த்தக பரிவர்த்தனை சாத்தியமாகும்.

இந்தியா வளர்ந்த நாடாக 10 சதவிகித பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு கொண்டுவர வேண்டுமென்றால், "கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் மூலமாக ரூ.5 லட்சம் கோடி வந்தால், அதன்  மூலம் இந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுப்போம்' என்று பாரத பிரதமர் நடவடிக்கை எடுத்து 26 ஜனவரி 2017-ல் அறிவிக்க வேண்டும்.

இல்லையென்றால் நமது கணிப்பின்படி ரூ.1.20 லட்சம் கோடி வராத கறுப்புப் பணத்திற்கு, தேசிய அதிதிறன் நீர் வழிச்சாலை திட்டத்திற்கு ஒதுக்கி அதைச் செயல்படுத்தினால், இந்திய பொரு ளாதாரம் வளரும். இந்தியா வளர்ந்த நாடாக அடுத்த 10 ஆண்டுகளில் மலரும். அப்படி வந்த வுடன் வருமானவரியை முற்றிலுமாக ஒழிக்கும் நிலைவரும். அதோடு அரசாங்க ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கை என்றைக்கு எடுக்கப்படுகிறதோ, அன்றைக்கு கண்டிப்பாக இந்தியா வளரும் நாடாக மாறும்.

அரசியல் கட்சிகள் வாங்கும் நன்கொடைக்கு வருமான வரியை செலுத்த நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்.

 சட்டத்தின் சந்து பொந்துகளைக் கண்ட றிந்து, மக்களைக் கசக்கிப் பிழியும் வரிச்சட்டங் களை, ஊழலுக்கு வழிவகுக்கும் சட்டங்களை  ஒழித்துவிட்டு, மக்களின் திறமைக்கு மதிப்புக் கொடுத்து, வளர்ச்சிக்கு ஆக்கம் கொடுத்து, வருமா னத்தை பெருக்கும் அரசியல், பொருளாதார, வங்கி மற்றும் நிறுவன கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

இதைச் செய்வார்களா என்பதுதான் இன்றைய நடுநிலை பார்வையாளர்களின், இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

உங்களுக்கு ஏதேனும் இந்த பதிவு தொடர்பாக கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதனை விமர்சன பெட்டியில் தெரிவியுங்கள்.

நன்றி:வெ.பொன்ராஜ் & நக்கீரன்

No comments:

Post a Comment