Monday 26 December 2016

ரிக்டர் என்ன தான் சொல்லுது...?


அதென்னப்பா ரிக்டர்....எங்கேயோ கேட்ட வார்த்தை போல தெரியுதே...!!

பொதுவாக நம்மில் பலருக்கு நில நடுக்கம் என்றால் என்ன....? என்று அடிக்கடி ஒரு கேள்வி உண்டாகும்.

அது என்னவென்றால்...

நமது பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகப்படியாக உண்டாகும் பொழுது, பெரிய அளவில் ஆற்றல் வெளிப்பட்டு அதன் மூலம் நிலத்தளத்தட்டுகள் நகர்கின்றன.இதனால் உருவாகும் அதிர்வே நிலநடுக்கம்,பூகம்பம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இந்த நில நடுக்கம் மற்றும் நில
அதிர்வு என்கிற வார்த்தைகளை செய்தியாளர்கள் உச்சரிக்கும்
பொழுது கூடவே இந்த வார்த்தை ஓட்டிக்கொண்டே வரும்.

ஆம்....அதாங்க ரிக்டர் அளவுகோல்...

ஒன்று தெரியுமா உங்களுக்கு....?

நாம் நினைப்பது போல் இது உண்மையில் இயற்பியல் கருவி அல்ல; மாறாக இது கணித சமன்பாடு ஆகும்.

அதுசரி...இதற்கு பெயர் ஏன் ரிக்டர் என வந்தது என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

சரி வாங்க...நான் அது பற்றி சற்று விரிவாக சொல்கிறேன்.

அமெரிக்காவில் குறிப்பாக கலிபோர்னியா பகுதியில் அடிக்கடி ஏற்படுகிற நிலநடுக்கத்தின் உண்மைத்தன்மையினை கண்டறிய கியூ வாடாட்டி ஆலோசனையின் பேரில் சார்லஸ் ரிக்டர் மற்றும் பையினோ கூட்டன்பெர்க் இருவரும் முயற்சி செய்ததன் விளைவாக சீஸ்மோகிராப் என சொல்லப்படுகிற நிலநடுக்க வரைவுமானியை கண்டறிகின்றனர்.

அதன் பின்னர் இந்த நில நடுக்கத்தின் தீவிரத்தை அளப்பதற்காக இருவரில் ஒருவரான சார்லஸ் ரிக்டர்,1934 ஆம்
ஆண்டில் தனது தீவிர முயற்சியினால்
கணித வாய்ப்பாட்டை உருவாக்கினார்.அதுவே பின்னர்
இவர் பெயரான ரிக்டர் கொண்டு அழைக்கப்பட்டது.அது தான் ரிக்டர் அளவுகோல் என்று இன்றும்
தொடர்கிறது.

மனிதனால் உணர முடியாத நில நடுக்கங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது,
இவை மைக்ரோ நிலநடுக்கம் என்றழைக்கப்படும்.

ஆனால் இது போன்ற சாதாரண
நில அதிர்வில் இருந்து மிகப்பெரிய
நில அதிர்வு வரை முன்கூட்டியே உணரும் சக்தி பறவைகளுக்கும்,
மிருகங்களுக்கும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அது எப்படி...? அவைகளால் மட்டும்
முன்னரே எவ்வாறு அறியப்படுகிறது என்று அறிய மனிதன் பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறான். விடை தான் முழுமையாக கிடைத்த பாடில்லை.

அதுதான் அந்த ஜீவராசிகளுக்கு மட்டுமே இயற்கையால் கொடுக்கப்பட்ட
வரமோ...என்னமோ...யார் அறிவார்.

இந்த ரிக்டர் அளவுகோலின் படி
2 or 3 என்கிற அளவில் இருக்கும் நில அதிர்வை மனிதனால் உணர முடிவதில்லை.அதுவே  6 or 7க்கு மேல் பதிவாகும் பொழுது மனிதனால் உணரமுடிந்தாலும்,நிலைமை என்னவோ மோசமாகிவிடுகிறது.

குறிப்பாக ஜனம் அதிகம் இருக்கும் இடத்தில் ஏற்படும் பொழுது உயிர் சேதம் பெரிய அளவில் இருக்கக்கூடும்.
மாறாக அதுவே இயற்கை வனப்பகுதியில் ஏற்படும் பொழுது பெரிய அளவில் நாசம் ஏற்படுவதில்லை.

இன்று கூட பாருங்கள்...சிலி நாட்டில் என்ற 7.6 என்கிற அளவில் பதிவாகி மிகப்பெரிய அளவில் நாசம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ நில அதிர்வின் வீரியத்தை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள கிடைத்த தற்போதைய எச்சரிக்கை மணி,
'ரிக்டர்' அளவுகோல் என்றால் மிகையில்லை.

தற்போதைய நிலவரப்படி,
இந்த துறையில் இன்னும் முன்னேற மனிதன் நெடுந்தூரம் செல்வது அவசியம் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

அதுவரைக்கும் இந்த ரிக்டர் என்ன தான் சொல்லுதுனு கொஞ்சம் கேட்போமே...

No comments:

Post a Comment