Sunday 18 December 2016

பறவையின் எச்சத்தால் பணக்கார நாடான குட்டித்தீவு..


அது எப்படி...பறவையின் எச்சத்தால் பணக்கார நாடாக முடியும்....!!!.என்று
உங்களை போல எனக்கும் சற்று வியப்பாக  தான் இருந்தது.அதற்கு விடை தேட முயற்சித்ததன் விளைவே இந்த பதிவு.

சரி வாங்க...அந்த நாட்டை பற்றி சொல்கிறேன்...கண்டுபிடிங்க பார்ப்போம்...!

தென் பசிபிக் கடலில் சரியாக ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் இருந்து சுமார் 4000 கிலோ மீட்டர் தொலைவில் நீள் வட்ட வடிவில் அமைந்திருக்கும் அமைதியான,
அழகிய குட்டித்தீவு.

இந்த நாடு 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்,சுமார் 10000 அளவிலான மக்கள் தொகை மட்டுமே கொண்ட சிறிய தேசம்.இந்த நாடு உலகிலேயே பரப்பளவில் மூன்றாவது சிறிய நாடாக உள்ளது.பவளப்பாறைகள் சூழ்ந்த தேசம்.

என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா....?

இல்லையா.....?

அந்த அழகிய தேசத்தின் பெயர்
இது தான்-நவ்ரூ


1968ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்தது இந்த நாடு. 1968ம் ஆண்டு அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.

மீன் பிடித்தல் மற்றும் விவசாயமே
இந்த நாட்டு மக்களின் பிராதான தொழில்.

தங்கள் நாட்டின் இயற்கை கொடையினை பற்றி நீண்ட நாள்களாக அறியாதவர்களாகவே அந்நாட்டு மக்கள் இருந்தனர்.ஒருவழியாக
தங்கள் நாட்டின் மதிப்பை
வெளிநாட்டினர் வாயிலாக அறிந்து கொண்டனர் அந்நாட்டு மக்கள்.

ஆமாங்க...

அது நாள் வரை,அந்நாட்டு மக்களுக்கு தங்கள் நாட்டில் மலை போல் குவிந்து கிடப்பது,விலை மதிக்க முடியாத பாஸ்பேட் என்கிற பொக்கிஷம்
என்று தெரியவில்லை.

அது என்ன பாஸ்பேட்...? அதனால்  என்ன பயன்....?

தாவரங்கள் உயிர்வாழ மிகவும் அவசியமான உரமாக....
பிளாஸ்டிக் தயாரிக்க...
மனிதனுக்கு அவசியமான தாது உப்பு...
வெடிபொருள் தயாரிக்க...

நான் மேலே சொன்னது சின்ன உதாரணம் தான்.இதன் பயன்பாடு பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றால்,இந்த ஒரு பதிவு போதாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி..விசயத்திற்கு வருகிறேன்...

இது போன்ற பாஸ்பேட் படிமங்கள் நிறைந்த பாறைகள்,பசிபிக் கடலில் உள்ள மற்ற தீவுகளான பனபா மற்றும் மகாடீ போன்ற தீவுகளுக்கு அடுத்த படியாக இந்த நவ்ரூ தீவில் தான் அதிகப்படியாக உள்ளன.

இந்த பாஸ்பேட் பின்னணியில் தான் பறவையின் எச்சம் இருக்கிறது.

என்ன ஆச்சர்யமா இருக்கா..!!!

ஆமாங்க....இது போன்ற பறவையின் எச்சம் நிறைந்த பாறைகள் தீவின் மையப்பகுதியில் இருக்கிறது.
இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பறவைகள் பல இங்கு வந்து எச்சம் இட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.அந்த எச்சத்தில் தான் பாஸ்பேட் நிறைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கேட்பார் அற்று கெடக்கும் பொக்கிஷத்தை வெளிநாட்டுக்காரன் சும்மா விடுவானா என்ன......?

இயற்கை செல்வத்தை அள்ளி செல்ல,
'பணம் தருகிறேன்'என ஆசை காட்டி  நவ்ரூவை பணியவைக்க முயற்சித்தன பல வெள்ளைக்கார நாடுகள்.

ஆசை யாரைத்தான் விட்டது...

ஒருவழியாக 1960 மற்றும் 1970 களில் ஒப்பந்தங்கள் பல போடப்பட்டு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு பாஸ்பேட் விற்று, செல்வம் கொழிக்கும் நாடாக நவ்ரூ மாறியது.

அதன் தொடர்ச்சியாக சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக தனி நபர் வருமானத்தில் உச்சத்தை எட்டியது நவ்ரூ.

அதுவரை பணத்திற்கு கஷ்டப்பட்ட நவ்ரூ மக்கள்,பணத்தை செலவழிக்க தெரியாமல் திண்டாடித்தான் போனார்கள்.

பக்கத்துக்கு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசீலாந்து நாடுகளுக்கு தங்களது பிள்ளைகளை படிக்க அனுப்பி வைத்தார்கள். உழைப்பை மறந்து கேளிக்கைகளில் நாட்டம் கொண்டார்கள்.அதிகளவில் குடிக்கும்,போதைக்கும் அடிமையானார்கள்.

இயற்கையாக இந்தத்தீவில் விவசாயம் செய்வது மிகவும் அரிது.காரணம் இங்கு குறைந்த அளவிலான பயிர் விளைவிக்கும் நிலம் கடலின் ஒரு ஓரப்பகுதியில் மட்டுமே இருக்கிறது .
அதிலும் தேங்காய் மற்றும் பழங்களான வாழை,அன்னாசி போன்றவை மட்டுமே அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

ஆகவே உணவுக்காக பிற நாடுகளை சார்ந்தே இன்றும் இருக்கிறது இந்த நவ்ரூ தீவு.


இந்த நாட்டு மக்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்ட சிக்கன் மற்றும் இதர பதப்படுத்தட்ட உணவுகளையே உண்பதால்,
அவர்களது உடல் எடை கூடி, இன்று உலகளவில் அதிக பருமன் உடையோர் அதாவது,தொண்ணுற்று ஐந்து(95%) சதவீதத்திற்கும் அதிகமானோர் வசிப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

சொகுசு வாழ்க்கையால் உடல் பெருத்த
அந்த நாட்டு மக்களை நடை பயில சொல்லி உத்தரவு போட்டு இருக்கிறதாம் அந்த நாட்டு அரசு.

அதோடு 31 சதவீதம் பேர் நீரழிவு
என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயாளிகள் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.இது போக கிட்னி,இதயம் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் இங்கு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நாட்டுக்கு என்று தனியாக ராணுவம் கிடையாது.உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டும் குறைந்தளவில் காவலர்கள் பணியில் உள்ளனர்.தன் நாட்டு பாதுகாப்பிற்கு முழுமையாக ஆஸ்திரேலியா ராணுவத்தையே சார்ந்துள்ளது.

ஒன்று தெரியுமா...?
2014ல் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் தேடி சென்ற 157 தமிழ் அகதிகளை,ஆஸ்திரேலியா தன் நாட்டில் அடைக்கலம் கொடுக்காமல்,
அவர்களை நவுருவுக்கு அனுப்பி
வைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்... ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் எந்தளவு நவ்ரூ நாட்டின் மேல் உள்ளது என்று.

நவ்ரூ நாடு குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா,தென்கொரியா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பை கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் சுரங்கத்தொழிலில் கொடி கட்டி பறந்தாலும்,தனது இயற்கை செல்வத்தை முழுமையாக இழந்து,பொலிவிழந்து வறுமையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது நவ்ரூ என்றால் அது தான் இன்றைய எதார்த்த நிலைமை.

பறவையின் எச்சத்தால் பணம் கொழித்த தேசம்..
மனிதனின் பேராசையால்
மரணித்து கொண்டிருக்கிறது....

No comments:

Post a Comment