Sunday 16 October 2016

இளைஞர்களின் கனவு நாயகன்.....


இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் APJ அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு oct-15ல்  ஜெயினுலாவுதீன் மரைக்காயர் மற்றும் ஆஷியம்மாள் தம்பதியருக்கு மகனாக
ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

தனது குடும்ப வறுமை காரணமாக
பள்ளிப்படிப்பின் போது நாளிதழ்களை விற்று அதன் மூலம் தனது துவக்க கல்வியினை படித்தார்.

ராமேஸ்வரத்தில் தொடங்கிய தனது கல்விப்பயணத்தை சென்னை MITயில் நிறைவு செய்தார். ஆனால் ஆசிரியராக தனது பணியினை இறுதி மூச்சு
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கடந்த வருடம் ஜூலை மாதம் 27ம் தேதி நிற்கும்வரை செய்து கொண்டே இருந்தார்.

இவரது சேவைக்காக கிடைத்த விருதுகள் ஏராளம். இந்தியாவின் அனைத்து உயரிய விருதுகளையும் வென்ற முதல் விஞ்ஞானி.
அதிலும் குறிப்பாக
1981ஆம் ஆண்டு பத்ம பூஷண்
1990 ஆம் ஆண்டு பத்ம விபூஷண்
1997ஆம் ஆண்டு நாட்டின் உயரிய பாரத ரத்னா போன்ற விருதுகள் இவரை கவுரவித்தன.

அவர் வகித்த பதவிகளும் ஏராளம் திருவனந்தபுரம் மற்றும் ஒரிசா மாநிலத்தில் உள்ள சண்டிப்பூரில் பல ஆண்டுகள் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் விஞ்ஞானியாக பணியாற்றிய அக்னி மனிதன்.
மேலும் அவர்,
1982ஆம் ஆண்டு விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராக செயல்பட்டார்.
1998ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு மூளையாக செயல்பட்டார் .
1999 நவம்பர் முதல் 2001 நவம்பர் வரை  அறிவியல் ஆலோசனைக்குழுவின் தலைவராக மற்றும் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகராகவும்
செயல்பட்டார்.

இதைவிட உச்சபட்சமாக நாட்டின் முதல் குடிமகன் என்கிற பதவியும் அவரை தேடி வந்தது.அது நடந்தேறியது 2002ல்.

எளிய மனிதராக,குழந்தைகள் விரும்பும் தலைவராக, இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இந்தியா மட்டுமின்றி உலகிற்கே விளங்கிய காலம் அது.

கனவு காணுங்கள்....
அந்த கனவு உங்கள் தூக்கத்தில் வருவதாக மட்டும் இருக்கக்கூடாது ;
உங்களை தூங்க விடாமல் செய்வதாக இருக்க வேண்டும் , என இளையோர் மனதில் தன்னம்பிக்கை விதைகளை தூவிவிட்டு சென்ற தலைவன்.

அவரது கனவுகள் ஏராளம்.அவற்றில் குறிப்பிட தகுந்தவை...

நாடு முழுதும் உள்ள நதிகள் அனைத்தையும் இணைக்கவேண்டும்.

இளையோர் பலரும் அரசு வேலைக்கு காத்திராது சுயதொழிலை தொடங்கி பலருக்கு வேலை வழங்கி வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும்.

நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும்.

நாடு முழுதும் மரக்கன்றுகள் நட்டு பசுமையான இந்தியாவினை உருவாக்க பாடுபடவேண்டும்.

2020ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம் பெருமை தானே...

அவர் கண்ட கனவு
ஏதேனும் ஒன்று நிறைவேற
நாமும் முயற்சிக்கலாமே..

No comments:

Post a Comment