Wednesday 16 November 2016

மைக்ரோ-மர்மங்கள்(பிரெட்)-6


நோயுற்ற காலங்களிலும் சரி மற்றும் நம் விரும்புகிற உணவு கிடைக்காத இடங்களிலும் சரி,நம் பசிபோக்க உதவுவது பிரெட் என்று அழைக்கப்படக்கூடிய ரொட்டித்துண்டு
என்றால் அது மிகையாகாது.

அனைவராலும் நம்மிடம் உள்ள மாவினை கொண்டு எளிதில் செய்யக்கூடிய மிகவும் இயல்பான மாவுச்சத்து நிறைந்த உணவு.

சரி இந்த பிரெட் செய்வதற்கு மிக
முக்கிய பங்காற்றுவது ஈஸ்ட் என்று அழைக்கப்படக்கூடிய நுண்ணுயிரி தான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா....

ஆம்....

இந்த ஒரு செல் நுண்ணுயிரியான ஈஸ்ட் துணையின்றி பிரெட் செய்வது மிகவும் கடினம்.

அவ்வாறு ஒருவேளை நாம் ஈஸ்ட் துணையின்றி பிரெட் செய்தாலும்,
பிரெட்டுக்கு உரிய இயல்பான சுவையோ,மிருதுவோ,மணமோ
கிடைக்கப்பெறாது.

ஆகவே தான் பிரெட் தயாரிப்பதற்கு என்று ஒரு வகை ஈஸ்ட் அதாவது சக்கரோமைசிஸ் செர்விஸியே
(Saccharomyces cerevisiae) பயன்படுத்தப்படுகிறது.


அப்படி என்ன தான் செய்யுது இந்த ஈஸ்ட்.....?

கடைகளில் கிடைக்க கூடிய இந்த ஈஸ்ட் க்ரானுலை சுடுதண்ணீரில் சிறிது நேரம் வைத்தால் போதும்.பின்னர் இந்த ஈஸ்ட் + நீர்க்கரைசலை நாம் விரும்புகிற மாவுக்கலவையுடன் சேர்த்து நன்றாக பிசைந்து சுமார் ஒன்றில் இருந்து மூன்று மணிநேரம் வைத்துவிட்டால் போதும்.

மூன்று மணிநேரத்திற்கு பிறகு மாவை பார்த்தோம் என்றால்,உப்பி மிருதுவாக இயல்புக்கு மாறாக சற்று அளவு பெரிதாக,உயர்ந்து இருக்கும்.

அந்த சமயம் நீங்கள் லேசாக எடுத்து சுவைத்து பார்த்தால் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

இதற்கு முழுமுதற்காரணம் ஈஸ்ட் மட்டுமே.....

இந்த ஈஸ்ட் தன்னுடைய சிறப்புமிகு நொதிகளை கொண்டு சர்க்கரை மூலக்கூற்றை உடைத்து
கார்பன் டை -ஆக்ஸைடை வெளியேற்றுகிறது.மேலும் சிறிது ஆல்கஹால்,கீடோன் ,எஸ்டர்,அமிலம் போன்றவற்றையும் வெளியிடுகிறது.

இவையே பிரெட் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்க செய்வதோடு, உப்புவதற்கு கார்பன் டை -ஆக்ஸைடு
காரணமாகிறது.இவையனைத்தும் நொதித்தல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இத்தகைய ஈஸ்ட் பிரெட் தயாரிப்பில் முக்கியமாக பங்கு பெறுவதால்
பிரெட் ஈஸ்ட் என்றும்,பேக்கர்ஸ் ஈஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

சரி நண்பர்களே....பிரெட் தயாரிப்பில்
ஈஸ்ட் என்கிற நன்மை செய்யும்
நுண்ணுயிரியின் பங்கை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்த மைக்ரோ-மர்மங்கள் பகுதியில் வேறு மர்மத்திற்கு விடை சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள்........

No comments:

Post a Comment