Friday 4 November 2016

கொசுக்கள் சாம்ராஜ்ஜியம்.....


ஒருகாலத்தில்
கொடிய மிருகங்களுக்கு மனிதன் அஞ்சிய காலம் போய்,இன்று
பொடிய கொசுக்களுக்கு
அஞ்சுகிற காலம் வந்துவிட்டது.

காரணம்,அது மனிதகுல மத்தியில் உருவாக்கி வைத்துள்ள
மரண பீதி தான்.

மலேரியாவில் ஆரம்பித்து சிக்கன்குனியா,டெங்கு என்று கடந்து
வந்து இன்று ஜிகாவில் வந்து நிற்கிறது.

இந்த கட்டுரை எழுதும் போது கூட
பாருங்க.....!!...நான் எவ்வளவு பாதுகாப்போடு இருந்தாலும் ஒரு கொசு மட்டும் எப்படி வந்ததுனு தெரியல,விடாது என் காதுகளுக்கு அருகில் வந்து ரீங்காரமிட்டு கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது,கைகளில் அவ்வப்போது கடிக்கவும் செய்கிறது.


என்ன செய்ய....?
நான் வாழுகிற சூழல் அவ்வாறு.....

சரி விடுங்க...... நான் விசயத்திற்கு வருகிறேன்.

இவை தென்னாப்பிரிக்காவில் தோன்றியதாகவும் அதன் பின்னரே உலகம் முழுக்க பரவியதாகவும் விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது.

அதுபோலவே 2700க்கும் அதிகமான  கொசு வகையினங்கள் உலகம் முழுக்க
இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொசுக்களே இல்லாத நாடுகளாக பிரான்ஸ் மற்றும் ஐஸ்லாந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அது உண்மையா, பொய்யா என்று அந்த நாட்டில் வசிக்கும் நம் மக்கள் யாராவது சொன்னால் தான் தெரியும்.

இது உண்மையாக இருந்தால் அவர்கள் பாக்கியசாலிகளே........

மனிதனை பாடாய்படுத்தி கொல்லும் கொசுக்களின் உண்மையான நோக்கம்
மனிதனைக் கொல்வதல்ல என்றால் உங்களால் நம்பமுடிகிறதா......

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது கிருமியினையோ அல்லது அதன் நச்சையோ,மனித உடலுக்குள் தன் உமிழ்நீர் வாயிலாக கடத்தும் கருவியே தவிர உண்மையான நோய் உண்டாக்கும் பூச்சியினம் இல்லை.

இத்தகைய பூச்சியினத்தை பற்றி அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்வோம்........


கொசு என்பது குலூஸிடே குடும்பத்தை சேர்ந்த சிறிய கணுக்காலி வகையிலான பூச்சிகள்.

மனித இனத்தைப்போன்று இங்கும் ஆண்,பெண் என்கிற பாலினம் உண்டு. இங்கு ஆணை விட பெண் கொசுக்களே ஆளுகின்றன.

பொதுவாக ஆண் கொசுக்கள் உணவாக தாவரச்சாற்றைப் பருகும்.
ரத்தத்தை ஒருபோதும் உறிஞ்சுவது கிடையாது.

பெண் கொசுக்களோ மனிதர்களிடமிருந்தும் மற்றும் பிற உயிரினங்களிலிருந்தும்
இரத்தத்தை உறிஞ்சுகின்றன.
என்றாலும் கூட
பெண் கொசுக்களுக்கு
ரத்தம் என்பது முதன்மையான உணவல்ல என்றால் நம்பமுடிகிறதா.....?

ஆணுடன் கலவியில் ஈடுபட்ட பிறகு முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காக மட்டுமே பெண் கொசுக்கள் ரத்தம் குடிக்கின்றன, என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால்,அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுமாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெரும்பாலும் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்கிற இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும்.
இவை தாம் பிறந்த இடத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி தொலைவுக்குள்ளேயே நடமாடுமாம்.

மாறாக உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்கிற ஒரு வகை கொசுக்கள்
கடற்கரை ஓரமுள்ள நீர்நிலைகளில் வசிக்கும்.இவை மனிதர்களையும், விலங்குகளையும் தேடி 75 மைல் தொலைவுக்குக்கூட பயணம் செய்யுமாம்.

பார்த்துக்குங்க மக்களே....
தன் இனத்தை பெருக்க
மனிதன் எங்கிருந்தாலும்
சும்மா விடாது போல.


ஆண் கொசுக்கள் ஆயுள் ஒருவாரம் தான்.... ஆண்கொசுக்கள் முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கின்றன.

கலவி முடிந்ததும் ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து அதன் சாற்றைக் குடித்துக்கொண்டு சாவகாசமாய் சந்தோசமாய் காலம் கழிக்கிறது.

பெண் கொசு ஆயுள் ஆணை ஒப்பிடும் பொழுது சற்று அதிகம் தான்... ஆம் ஏறக்குறைய ஒருமாதம் வரை வாழுமாம்........

அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிட வேண்டும்.பல சமயங்களில் சராசரியாக நூறு முட்டைகளை இடுமாம்.

கொசு மனித ரத்தத்தை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் உறிஞ்சி  தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தி,அதனுடன் சில நொதிகள் சேர்க்கப்பட்டு கொசுக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும்.

இதன் மூலம் மாண்ட மனிதர்கள் கோடிக்கணக்கில் இருப்பர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்,இதன் வீரியம் எத்தகையது என்று......



சராசரியாக பத்து லட்சம் மனிதர்கள் ஆண்டுதோறும் கொசு கடித்து அதன் மூலம் பரவும் நோய்களால் உலகம் முழுவதும் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் குறிப்படத்தகுந்தவை.... மலேரியா
மஞ்சள் காய்ச்சல்
மூளைக்காய்ச்சல்
யானைக்கால் வியாதி
சிக்கன்குனியா
டெங்கு
ஜிகா......
இவையாவும் இன்றும் கொசு மூலம் மனித உயிருக்கு உலைவைக்கும் கொடிய நோய்கள் என்றால் மிகையில்லை.

பொதுவாக இந்த கொசுக்களிடம்
நம்மை தற்காத்து கொள்ள என்ன செய்யலாம்......

மழை என்றால் நமக்கு மட்டுமல்ல கொசுக்களுக்கு கூட கொண்டாட்டம் தான்.......ஆகவே,வீட்டின் அருகில் மழைநீரை தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுவது மிக அவசியம்.

நாம் பயன்படுத்தும் கொசுவர்த்திகள் நம் நுரையீரலுக்கு உகந்தவை அல்ல; ஆகவே அதனை தவிர்த்து இயற்கை கொசுவிரட்டிகளை பயன்படுத்தலாம்.

கொசுவலைகளை பயன்படுத்தி முடிந்தவரை வீட்டிற்குள் கொசுக்கள் நுழையாதவாறு தடுக்கலாம்.

டெங்கு நோய் பரப்பும் கொசு பகல் நேரத்தில் கடிக்கும் என்கிறார்கள், அதுவும் அவை முழங்காலுக்கு கீழே கடிக்கும் என்றும் சொல்கிறார்கள்...
ஆகவே எச்சரிக்கையாக உடம்பினை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியலாம்.

ஒருவேளை காய்ச்சலாக உணர்ந்தால் மறக்காமல் நீலவேம்பு குடிநீர் கஷாயத்தை வாங்கி சுடுதண்ணீரில் இட்டு இருத்தி காய்ச்சி குடித்தால் குணம்பெறலாம்.

எது எப்படியோ தற்போது வரை
நாம் அனைவரும் கொசுக்களின் சாம்ராஜ்ஜியத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்........

இதில் இருந்து நாம் விடுதலை பெற வேண்டும் என்றால் நம் சுற்றுப்புறத்தை நீர் தேங்காது பார்த்து கொள்ள வேண்டும்.

அதுவே முதல் பணியாக அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.

முன்னெடுப்பீர்களா.....கொசுக்களை விரட்டுவோம் ஓட......... ஓட.........

1 comment: