Monday 21 November 2016

கடைக்காரர் இல்லாத கடைகள் (இதுவும் நம் இந்தியாவில் தான்)


என்னடா தலைப்பே புதுசாவும், வியப்பாகவும் இருக்கிறதா...?

அதுவும் இந்தியாவில்,
கடைக்காரர் இல்லாத கடைகளா...?
சாத்தியமே இல்லை என சத்தியம் செய்வோர் உண்டு.

ஆனால் நம் நாட்டில் விவசாயிகள்
சாத்தியமாக்கி காட்டி இருக்கிறார்கள்.

அது எங்கே,எப்படி என்று
இப்பதிவில் காண்போம்...

மிசோரம் என்கிற மாநிலம் இந்தியாவில் இருக்கிறது என்று நம் எத்தனை பேருக்கு தெரியும்....?

சரி....ஒருவேளை உங்களுக்கு தெரியலைனா வாங்க இனியாவது
தெரிஞ்சுக்குவோம்.....

சுமார் பத்தில் இருந்து பதினொன்று லட்சத்திற்குள் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய வடகிழக்கு மாநிலம்.மியான்மர்,பங்களாதேஷ் நாடுகளை எல்லையாக கொண்டது.
இங்கு அதிகபட்ச மக்கள் கிறித்துவ மதத்தை பின்பற்றுகின்றனர்.
இந்த மாநிலத்தின் பெயரான மிசோரம் என்றால் 'மலை வாழ் மக்களின் நிலம்' என பொருள்படும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்,
முழுக்க முழுக்க மலை சூழ்ந்த பசுமைமிக்க அழகிய மாநிலம்.


நாம் எங்கெங்கோ சுற்றுலா செல்கிறோம்.இது போன்ற சகோதர மாநிலங்களுக்கு சென்றதில்லை. அவர்களும் நம் மாநிலங்களுக்கு பெரிதாக வந்து செல்வதில்லை (இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வயிற்று பிழைப்பிற்காக மட்டும் வரும் வடகிழக்கு முகங்களை காண முடிகிறது).

காரணம் போக்குவரத்து பிரச்சனையே.....

இதனை இந்திய சரி செய்து, நம் கவனம் பெறாத இது போன்ற மாநிலத்தின் பெருமையை இந்தியர்கள் அனைவருக்குமாவது தெரியப்படுத்தலாமே....

பெரும்பான்மையான இந்தியர்களின் கவனம் பெறாத வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இங்கு தான் சர்வசாதாரணமாக மனிதன் இல்லாத கடைகள் மலிந்து காணப்படுகிறது.


இங்கு வாழும் கிராம விவசாயிகளின் எண்ணத்தில் உதித்தவையே, இதுபோன்ற கடைக்காரர் இல்லா கடைகள்.

பார்த்துக்கோங்க மக்களே.....!
அவர்களது எண்ணம் எவ்வளவு
பெரிது என்று....

நம்மூரில் இது போன்ற கடைகள் சாத்தியமா....?
அதுவும் சாலை ஓரங்களில் (எனக்கு தெரிந்து இதுபோன்ற கடைகள்
எங்கள் பகுதியில் இதுவரை இல்லை;
ஒருவேளை உங்கள் ஊரில் இதுபோன்ற கடைகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்).

சரி விசயத்திற்கு வருகிறேன்...
மிசோரம் தலைநகரமான ஐஸ்வால்லில் இருந்து சரியாக அறுபத்தி ஐந்து(65km) கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸெலிங் (seling).அந்த மலைகள் நிறைந்த நெடுஞ்சாலை பகுதியில் தான் இது போன்ற கடைக்காரர் இல்லா கடைகள் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக தென்படுகிறது.

இந்த கடைகளை அம்மாநில மக்கள்
nghah lou dawr (shops without shopkeepers) என்று அழைக்கிறார்கள்.

கடைகள் எப்படி இருக்கு....?


சாலை ஓரங்களில் திறந்த வெளியில்
மூங்கில் கம்புகள் நட்டு,சிறிய தட்டி வேய்ந்த கிடுகை அவ்வளவுதான்...

அங்கு விற்பனைக்குரிய பொருள்கள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும்
(பொருள்கள் யாவும் அந்த பகுதியில் விளைபவை மற்றும் கிடைப்பவை).

மேலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளின் விலையும் அட்டையில் எழுதி தொங்க விடப்பட்டிருக்கும்.

பணம் செலுத்துவதற்கு என்று ஒரு பாட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

என்னென்ன  பொருள்கள் இங்கு கிடைக்கின்றது.....?

காய்கறிகள்
பழங்கள்
உப்புக்கருவாடு
பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறு

யார் இங்கு வாங்குகிறார்கள்.....?

நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் தங்கள் விருப்பமான பொருள் விற்பனைக்கு இருந்தால்,அதனை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை பாட்டிலில் போடுகிறார்கள்.

மீதி சில்லறையை இருந்தால் எடுத்துக்கொள்கிறார்கள்...இல்லை என்றால் அடுத்த நாள் வந்து எடுத்து செல்கிறார்கள்.


ஒருசிலர் சில்லறையை எடுக்க வருவதில்லை;ஆனாலும் ஒருபோதும் பொருளுக்குரிய காசு இல்லாமல் இருந்ததில்லை,அதைவிட அதிகமாகவே இருக்கும் என்று சொல்கிறார்கள் அந்த பகுதியில் இதுபோன்ற கடை வைத்திருக்கும் விவசாயிகள்.

கொஞ்சம் யோசித்து பாருங்க நண்பர்களே.....இதுபோன்ற கடைகள்
நம் மாநிலத்தில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்...?

நேர்மை,நம்பிக்கை அவர்களிடம் மூலதனமாக இருக்கிறது.அது நாம் அனைவரிடமும் இருந்தால் இதுபோன்ற கடைக்காரர் இல்லாத கடைகள் நம் பகுதியிலும் சாத்தியமே..

அத்தகையதொரு நாளுக்காக காத்திருப்போம்..............

No comments:

Post a Comment