Wednesday 9 November 2016

பேசும் பாலாவின் கதாபாத்திரங்கள் - சேது(சியான்)



தனக்கு பிடித்ததை செய்பவன் தான் உண்மையான படைப்பாளி; மற்றவருக்கு பிடிக்கும் என்பதற்காக
தன் சுயத்தை இழப்பவன்,ஒருபோதும் தான் விரும்பியதை செய்யவே முடியாது.மேலும் அவன் எப்பொழுதும்
உண்மையான படைப்பாளி
ஆகவும் முடியாது.

அப்படி தன் சுயத்தை ஒருபோதும்
இழக்காமல்,தமிழ் சினிமாவில் சுதந்திரமாக தன் போக்கில் கதை சொல்லும் வெகு சில ஆளுமையுள்ள இயக்குனர்களில் ஒருவர் தான் பாலா......

இந்த பதிவில் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குனர் பாலா அவர்களுடைய திரைப்படங்களில் ஒன்றான சேதுவில் வருகிற கதாபாத்திர பெயர்,அதன் உண்மையான பின்புலம் மற்றும் அவர் கையாண்டிருக்கிற விதம் போன்றவை பற்றி விரிவாக அலசுவோம்.

பாலாவின் சேது வெளிவந்து பதினேழு வருடம் ஆகப்போகிறது.இன்னும் அந்த திரைப்படம் யார் மனசை விட்டும் அகலாது நிழலாடிக்கொண்டிருக்கிறது.
காரணம் சேது என்கிற சியான் கதாபாத்திரத்தின் வீச்சு அப்படி.

இப்ப காதலிக்கிற அத்தனை பேரையும்,
டே..... சேது போல ஆயிடாத.....என நம் நண்பர்கள் கிண்டல் பண்ணுவதை நாம் கண்கூட காண்பது உண்டு.

ஒரு நல்ல திரைப்படம் என்பது நம் மனதில் என்றும் அழிக்க முடியாத சுவடை ஏற்படுத்துவதாய் இருக்க வேண்டும் மற்றும் நம் மனதை விட்டு காலம் முழுக்க நீங்காது
இருக்க வேண்டும்.

அப்படி ஒரு தடத்தை நம் மனதில் பதிந்து விட்டு சென்ற படம் தான் இந்த சேது.

சரி விசயத்திற்கு வருகிறேன்......

சேது என்கிற பெயரில் பல பிரச்சனைகள் கடந்து மாபெரும் வெற்றி பெற்று இந்த உலகிற்கு தலைசிறந்த இயக்குனர் மற்றும் நடிகனை ( இன்று சியான் என்கிற அடைமொழியுடன் வலம் வரும் விக்ரம் என்கிற நடிகனுக்கு முகவரி தந்தது ) வெளிச்சம் போட்டு காட்டியது என்பது அதற்கு முன் தமிழ் சினிமா கண்டிராத வரலாறு.

சேது என்ற பெயருக்கு ஒரு மிகப்பெரிய பின்புலம் உண்டு.காரணம் இந்த கதை சேதுபதி ஆண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்வதாக பின்னப்பட்டிருக்கும்.அதுவே கதை நாயகனின் பெயராகவும் மற்றும் படத்தின் தலைப்பாகவும் வைத்திருப்பார் இயக்குனர் பாலா அவர்கள்.

மேலும் நாயகனின் பெயர் சேது என்றாலும் சியான் என்கிற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படும்.அந்த வார்த்தைக்கு விளக்கம் தேடி அந்த படத்திலேயே காட்சிகள் வைத்திருப்பார் இயக்குனர்.

இந்த சியான் என்கிற வார்த்தையும் ராமநாதபுரம் மாவட்ட வழக்கு சொல் என்றால் நம்புவீர்களா....?

ஆம்....

சியான் என்றால் பெருசு,
கட்டப்பஞ்சாயத்து செய்யும்
வயதில் மூத்தவர்களை மற்றும் ஊர்த் தலைவனை குறிப்பிடுவதாகும்.

கதைப்படி நாயகன் அடாவடித்தனமிக்க கல்லூரி மாணவர் தலைவராக இருப்பார்.ஆகவே தான் பெயரும் அதற்கேற்றபடி சியான் என்று வைத்திருப்பார் இயக்குனர்.

எவ்வளவு பெரிய முரட்டுத்தனமான நபராக இருந்தாலும் காதலில் விழுந்தால் கந்தல் தான் என சொல்லாமல் சொல்லியிருப்பார்.

ஆனால் இன்றோ.....கதைக்கு சம்பந்தமே இல்லாத, ஏதோ பொத்தாம் பொதுவா படத்தலைப்பு வைப்பது, தமிழ் சினிமாவில் பேஷனா மாறிப்போனது
தான் கொடுமையிலும் கொடுமை.

இந்த பகுதியில் ஒரு கதாபாத்திர பின்னணியினை அறிந்து கொண்டீர்கள்.

அடுத்த பகுதியில் பாலாவின் மற்றொரு பேர் சொல்லும் கதாபாத்திரம் பற்றி சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்...

No comments:

Post a Comment