Saturday 12 November 2016

உலகின் விலை உயர்ந்த காப்பித்தூள்


நம் காலைப்பொழுது காபி அல்லது தேயிலை அல்லாது ஒருபோதும் விடியாது.

நீங்கள் காபி பிரியர் என்றால்,
இந்த விஷயம் கொஞ்சம் உங்களை அதிரவைக்கும் செய்தியாகவோ அல்லது ஆச்சர்யப்பட வைக்கும் சேதியாகவோ இருக்கலாம்.

ஆமாங்க...

உலகின் விலை உயர்ந்த காபி பற்றி தான் நான் சொல்லப்போறேன்...

இது எங்கு விளைகிறது.......? இந்தோனேஷியா,வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நம் ஆசிய
நாடுகளில் தான்....

அப்படி என்ன இங்கும் விளையும் காபிக்கொட்டைகளுக்கு மட்டும் தனி மவுசு என  உங்களைப்போன்று எனக்கும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதன் விளைவே இந்த பதிவு.

இந்த காப்பியின் மவுசுக்கு காரணம் அதன் தனி சுவை மற்றும் நறுமணம்.

இந்த இரண்டிற்கும் காரணம்
ஒரு வகை பூனை என்றால்
உங்களால் நம்பமுடிகிறதா.....?

நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
வேறு வழியில்லை.
ஏன் என்றால்,
அதுதானே உண்மையும் கூட......

இந்தோனேசியாவில் வசிக்கும்
மரநாய் வகை இனமான புனுகுப்பூனையின் கைங்கர்யமே இத்தனை மவுசுக்கு காரணம்.

புனுகுப்பூனை இயற்கையாக   விளையும் காப்பிப்பழங்களை உணவாக எடுத்துக்கொள்ளும்.

அப்பொழுது பழத்தின் சதையினை சாப்பிட்டுவிட்டு காபிக்கொட்டையினை எச்சமாக விட்டுவிடும் (எப்படி என்றால் நம்மூர் காகம் வேப்பம்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை எச்சமாக விட்டு செல்லுமே அது போலத்தான் )

அந்த காலத்தில்,அப்படி எச்சமாக விடப்பட்ட காபிக்கொட்டையினை சேகரித்து அதனை கழுவி சுத்தம் செய்து பின் அதனை பொடியாக அரைத்து காப்பித்தூளாக பயன்படுத்தி வந்தார்கள் இந்தோனேசிய மக்கள்.

இதற்கும் ஒரு சுவாரஸ்யமான
வரலாற்று பின்னணி உண்டு........

அது என்னவென்றால்...
பதினேழாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் டச்சுக்காரர்களின் காபித்தோட்டங்களில் இந்தோனேசிய விவசாயிகள் கூலிகளாக வேலைபார்த்து வந்தனர்.

அப்பொழுது அவர்களால் காபிக்கொட்டைகளை பறிக்க மட்டுமே அனுமதிப்பார்களாம்.ஆனால் பயன்படுத்த அனுமதி இல்லை.

ஒருவழியாக புனுகுப்பூனை சாப்பிட்டுவிட்டு எச்சமாக விட்டு
சென்ற கொட்டைகளை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என பின்னர் அந்த டச்சு காபி நிறுவனத்தினர் விவசாயிகளுக்கு அனுமதி கொடுத்தார்களாம்.

ஆனால், இயற்கையாக விளையும் காபிக்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் காபித்தூளை விட,
புனுகுப்பூனை எச்சமாக விட்ட காபிக்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் காபித்தூளே மிகவும் தரமானது,ருசியானது என்று பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது.

பார்த்துக்கொங்க மக்களே.....
அன்று உழைக்கிறவனுக்கு எச்சம் தான்
பரிசு என அறிவித்தான் .
ஆனால்,இன்றோ உலகம் அதுதான்
விலை உயர்ந்த பொருளாக  பாவிக்கிறது.
இதுதான் இயற்கையின் விதி...

அப்புறம் என்ன....
இதன் மவுசும்,பவுசும் உலகம் பூரா பரவிற்று.

இன்று
இந்த காப்பித்தூள் கிலோ என்ன விலை எனத்தெரியுமா...?

கொஞ்சம் தான்.இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹45,000 இல் இருந்து ₹55,000 வரை தான்.(விலை அதன் நறுமணத்தை பொறுத்தே)

என்ன கேட்டவுடன் தலை சுத்துதா....?

தனிசுவைக்காக மட்டும்,இத்தகைய உலகின் விலை உயர்ந்த காபி குடிப்பவர்களும் உலகத்தில் இருக்குத்தான் செய்கிறார்கள்....

புனுகுப்பூனை காபி பழத்தை சாப்பிட்டவுடன் அதன் வயிற்றில்  செரிக்கும் ஒரு நொதி உற்பத்தியாவதாகவும்,அதுவே செரிக்காத காபிக்கொட்டைக்கு நறுமணத்தை தருவதாகவும் சொல்கிறார்கள்.

இது உண்மையோ,பொய்யோ.....
யாருக்கும் தெரியாது.
ஆனாலும் நமக்கு இது நிச்சயம் அதிசயமாகவும்,ஆச்சர்யமாகவும்
தான் உள்ளது.

நம்ம ருசிபார்க்கலாம்னு பார்த்தா.... விலை தான் கண்ணக்கட்டுதே....
என்ன செய்றது...?

No comments:

Post a Comment