Friday 25 November 2016

பேசும் பாலாவின் கதாபாத்திரங்கள்- சூறாவளி


நாம் மறந்தவர்களை,நம் மண்டையில் கொட்டி அவ்வப்போது தன் சினிமா மூலம் அவர்களை நமக்கு நினைவுபடுத்துவதில் கில்லாடி என்றால் அது இயக்குனர் பாலாவிற்கு நிகர் வேறு யாருமில்லை.

நீங்கள் இயக்குனர் பாலா படங்களில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களையும்,சற்று ஆழ்ந்து உற்றுநோக்கி பார்த்தீர்கள் என்றால், அந்த பெயர்களுக்கு சரியான காரண காரியங்களோடு பின்புலம் இருக்கும்.

மற்ற இயக்குனர்கள் போன்று பொத்தாம் பொதுவாக கதாபாத்திரங்களையும் சரி,அதன் பெயர்களையும் சரி இயக்குனர் பாலா அவர்கள் அவ்வளவு எளிதாக தெரிவு செய்வதில்லை.

அப்படி இயக்குனர் பாலாவினால் தெரிவு செய்யப்பட்ட பெண் கதாபாத்திரங்களில் மிகவும் அழுத்தமானது மட்டுமல்லாது,மிகவும் யதார்த்தமானது தான் இந்த சூறாவளி.

உண்மையில் எத்தனை பேருக்கு தாரை தப்பட்டையில் வரும் சூறாவளி (வரலட்சுமி) கதாபாத்திரம் பிடித்திருந்தது என்பது எனக்கு தெரியாது.

ஆனால் அந்த கதாபாத்திரம் போன்று ஆயிரமாயிரம் சூறாவளிகள் வாழ்ந்து மடிந்து இருக்கிறார்கள்.
இன்னும் வாழ்ந்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள்......

அவர்களில் ஒருத்தி தான் இந்த சூறாவளி.

நாம் நினைக்கலாம்........சூறாவளி
மாமனோட சேர்ந்து தண்ணி அடிக்கிறாள்,இவளை எப்படி ஒரு பெண்ணாக பாவிப்பது என்று...?

ஆனால் நிதர்சன உண்மை என்னவென்றால்,இரவு முழுக்க உடலை அசைத்து ஆடுவதால் வருகிற களைப்பிற்காக தான் அவர்கள் குடிக்கிறார்கள் என்று நம் எத்தனைக்கு பேருக்கு தெரியும்......?
பின் அந்த மதுவின் மூலம் சூறாவளி போல வாழ்க்கையை தொலைத்தவர்களும் பலர் உண்டு.

அந்த விபரீதத்தை இடைவேளைக்கு பின் ஒரு கவிழ்ந்து கிடக்கும் மது பாட்டிலை காண்பித்து நாசுக்காக சூறாவளியின் நிலைதனை அழகுற காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் பாலா அவர்கள்.

ஆபாசம் அதிகமா இருக்கு என அனைவரது எண்ணமும் கூட.....

இந்த திரைப்படத்தை பொறுத்தவரை
ஆபாசம் இல்லை என்றால் தான் தவறு. அது ஏன் என்றால் தற்போதுள்ள கரகாட்டத்தை,இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வார்த்தைகள்  தவிர்த்து பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

அதையே,அதாவது இன்றைய கரகாட்டத்தை அப்படியே ஓரளவு
மறைக்காமல் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர்.

உண்மை ஒருபோதும் இனிப்பதில்லை....அது எப்போதும் கசக்கவே செய்யும்....என்ன செய்வது.

நீங்கள் கிராமப்பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றால் இவர்களைப்போன்ற ஆட்டக்காரிகளின் வாழ்க்கை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

இவர்களுக்கு இளையவர்களை விட வயதான பெரியவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் கொடுக்கும் பாலியல் சீண்டல்கள் ஏராளம்.

வசதி படைத்தவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்த சூறாவளிகளும் உண்டு.

மாறாக படத்தில் வரும் சூறாவளியைப்
போன்று காதலிப்போரும் உண்டு.தன் காதலன் சொல்லுக்கு கட்டுப்பட்டு காதலை தங்கள் மனதில் புதைத்து
இன்னொருவனுக்கு வாக்கப்பட்டு
மண்ணில் மறைந்தோரும் உண்டு.

அதனைத்தான் இயக்குனர் வரலட்சுமி வாயிலாக தெளிவுற தன் திரைக்கதை மூலம் சூறாவளியை செதுக்கி இருப்பார்.

தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக அண்ணன்,தங்கை கூட ஆபாசமாக ஜோடி போட்டு பாடி ஆடுவார்கள்.இது நூற்றுக்கு நூறு உண்மை என எத்தனை பேருக்கு தெரியும்...?

நாம் அதனை சிறிது நேரம் ரசித்து விட்டு கடந்து சென்று விடுவோம்.இது தான் எதார்த்தம்.

அதனையும் இடைவேளைக்கு பின் அழகாக பாடல் மூலம் இயக்குனர்
காரணகாரியத்தோடு காட்சிப்படுத்தியிருப்பார்.

இது போன்ற ஆடல்,பாடல் காட்சிகள் இன்னும் கிராமப்பகுதியில் வயதான பெரியவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.அவர்கள் ஆட்டக்காரிகளின் நெஞ்சில் ரூபாய் நோட்டை குத்துவதை நான் கண்கூட பார்த்திருக்கிறேன்.

பெரும்பாலும் ஆட்டக்காரிகளோடு நெருங்கி பேசிப்பார்த்தால் அவர்களிடம் முரட்டு ஆண் குணம் மிகுந்து இருக்கும்.அதற்காக அவர்கள் ஆண்களோ, மாற்றுப்பாலினத்தவரோ கிடையாது.உண்மையான பெண்கள் தான்.

அதற்கு காரணம்,பெரும்பாலும் அவர்களது பழக்கவழக்கம் ஆண்களை சுற்றியே இருக்கும்.காரணம் அவர்களது தொழில் அப்படி.மேலும் அதுவே தங்களை ஆண்களிடம் இருந்து பாதுகாக்கும் கவசம் கூட என்கிறார்கள் ஆட்டக்காரிகள்.

இது போன்ற முரட்டு ஆண் குணம் மிகுந்த சூறாவளியாக வரலட்சுமியை பயன்படுத்தியிருப்பார்.மேலும் அதனை சன்னாசி (சசிகுமார்) வார்த்தை மூலம் மறைமுகமாக சொல்லி இருப்பார் இயக்குனர் பாலா அவர்கள்.

வயிற்றுப்பிழைப்பிற்காக,சூறாவளி என்கிற பெண் எங்கோ நடு இரவில்,
நம் சமூகத்தில் இன்னும் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஆடிக்கொண்டு தான் இருக்கிறாள்.

அவர்களை தரிசிக்க நம் பெருசுகளும்,
காந்தி சிரிக்கிற ரூபாய் நோட்டுகளோடு இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.....

No comments:

Post a Comment