Friday 25 November 2016

பேசும் பாலாவின் கதாபாத்திரங்கள் - ஒட்டுப்பொறுக்கி

நிகழ் காலத்தில் ஒட்டுப்பொறுக்கி என்கிற இந்த சொலவடையை நீங்கள் கேட்டதுண்டா......?
அப்படி நீங்கள் கேட்டிருந்தாலும் மிக அரிதாகவே இருக்கும்.

சரி ஒட்டுப்பொறுக்கி என்றால் யார் ..?

வசதியில்லா அந்த காலத்தில் நம் மக்கள் தங்களது வீட்டில் நடக்கிற சுக துக்க நிகழ்வுகளை தகவலாக சொல்ல ஒரு சிலரை நியமித்திருப்பார்கள்.

அவன் தமுக்கு அடித்து ஊராருக்கு தகவல் சொல்லி அதனால் கிடைக்கிற தானியங்களை வைத்து தன் வயிற்று பிழைப்பினை நடத்துபவன்.

கிராமங்களில் தகவல் சொல்லிவிட்டு
தானியம் வாங்கி செல்பவரை,நான் என் சிறு பிராயத்தில் கண்கூட பார்த்ததுண்டு.

ஒரு சில கிராமப்பகுதியில் தங்கள் வீட்டு விசேஷத்திற்கு மொய் எழுதாதவர்களிடம் வசூல் செய்ய இவர்களை தகவல் சொல்ல பயன்படுத்திக்கொள்வதுண்டு.

இவர்களில் ஒருவனை மையப்படுத்தி பரதேசி என்கிற காவியத்தை படைத்திருப்பார் இயக்குனர் பாலா.

அப்படி ஒரு நபராக அதர்வாவை
அச்சு அசலாக பரதேசி படத்தில் ஒட்டுப்பொறுக்கியாக
செதுக்கி இருப்பார் இயக்குனர்.

இந்த  ஒட்டுப்பொறுக்கி இருக்கிற ஊர் பஞ்சத்தில் சிக்கி கொள்ளும் பொழுது, அவனது வாழ்வு எத்தகைய அபாய திசை நோக்கி செல்கிறது என்பதனை இயக்குனர் பாலா தனது அழகிய திரைக்கதை மூலம் நேர்த்தியாக சொல்லியிருப்பார்.

மேலும் பரதேசி மூலம் ஒரு ஒட்டுபொறுக்கியின் அப்பாவித்தனம்,
குடும்பம்,காதல் போன்றவற்றை சிறந்த இயல்பான கதை மூலமாக நம் கண் முன் அழகுற காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர்.

அந்தக்காலத்தில்....
எனக்கு விவரம் தெரிந்து,இந்த ஒட்டுப்பொறுக்கிகள் தகவல் சொல்வதற்கு தானமாக தானியம் மட்டுமல்ல,வீட்டில் எது கொடுத்தாலும் அது பலகாரமா இருக்கலாம்...இல்லை நம் பயன்படுத்திய துணிமணிகளாக இருக்கலாம்..... அவை எதுவாயிருப்பினும்,அதனை பெற அவர்கள் ஒருபோதும் கூச்சப்படுவதில்லை.

இன்றோ... அவர்களது வாரிசுகள் காசைத்தவிர வேறு எதனையும் பெறுவதில்லை.

இதையும் கூட எளிதில் நமக்கு புரியும் படியாக ஆரம்ப காட்சியிலும், கங்காணியை சந்திக்கும் முன் வரும் காட்சியிலும் நமக்கு தெளிவுபடுத்தி இருப்பார் இயக்குனர் பாலா.

இன்றும் நம்மோடு நவீன கால
ஒட்டுப்பொறுக்கிகள் வெவ்வேறு வடிவில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் தான் அவர்களை ஒருபோதும் பொருட்படுத்துவதேயில்லை.

No comments:

Post a Comment